முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டில் இருந்த சுமார் 6.97 ஏக்கர் காணி பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இக்காணி இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ. உமாமகேஸ்வரன் முன்னிலையில் இந்தக் காணி கையளிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாவசிய தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த காணிகளைப் படிப்படியாக அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கும், பொதுப் பயன்பாட்டிற்காகக் கிடைக்கச் செய்வதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் ஏ. உமாமகேஸ்வரன் இதன்போது நன்றியைத் தெரிவித்தார்.








