தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) சென்னை சென்றுள்ளார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, அமைச்சர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் அவரை வரவேற்றனர்.
இதனையடுத்து, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தமிழகத்தில் சுமார் 13,000 கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைப் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, சுமார் 3,700 கோடி ரூபாய் பெறுமதியான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அத்துடன், சுமார் 750 கோடி ரூபாய் பெறுமதியான ரயில்வே திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன், புனரமைக்கப்பட்ட ஐந்து ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்.
இதற்கிடையில், சுமார் 4,900 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து புதிய மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டனர்.








