பிரபல பொலிவூட் நடிகை கரீனா கபூர் கான், தீபாவளி பண்டிகையின்போது அணிந்திருந்த ஆபரணம் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ரியா கபூருக்கும் சட்ட அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் இந்த சட்ட அறிவித்தலை அனுப்பியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குவதுடன், பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.தீபாவளியை முன்னிட்டு கரீனா கபூர் தனது பாரம்பரிய பண்டிகை ஆடைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த போபால் அரச குடும்பத்திற்குச் சொந்தமான மரகதக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், இஸ்லாமியர்களால் புனிதமாகக் கருதப்படும் அல்குர்ஆனின் ஆயத்துல் குர்ஸி வசனம் எனத் தகவல்கள் வெளியாகின.
இதனால் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏற்பட்டது.இந்த ஆபரணத்தை ஆடை அலங்காரத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவது மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என அப்பாஸ் ஹபீஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் கரீனா கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருக்கு சட்ட அறிவித்தல் அனுப்பியுள்ள அவர், சர்ச்சைக்குரிய புகைப்படங்களை உடனடியாக நீக்குவதுடன் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.மேலும், தான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் தனிப்பட்ட முறையிலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
புகைப்படங்களை நீக்கி மன்னிப்புக் கோரத் தவறினால், பொலிஸார் அல்லது நீதிமன்றத்தின் ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.தீபாவளியன்று, வடிவமைப்பாளர் புனித் பலானா வடிவமைத்த தூய வெள்ளியிலான கஃப்தான் ஆடை மற்றும் அதற்குப் பொருத்தமான தலைப்பாகை அணிந்திருந்த கரீனா கபூரின் புகைப்படங்களை ரியா கபூர் பகிர்ந்திருந்தார்.
இதன்போது, போபால் நவாப்புக்குச் சொந்தமான சுமார் 200 ஆண்டுகள் பழமையான கல்கி எனப்படும் தலை அலங்கார ஆபரணத்தையும், போபால் பேகத்துக்குச் சொந்தமான 30 கரட் மரகதக் கல் மாலையையும் கரீனா அணிந்திருந்தார்.குறிப்பாக, அந்த மரகதக் கல்லில் அல்குர்ஆனின் ஆயத்துல் குர்ஸி வசனம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபரணங்கள், கரீனாவின் கணவர் சைப் அலி கானின் குடும்ப வழியாகப் போபால் அரச குடும்பத்திலிருந்து வந்த பாரம்பரியச் சொத்துகளாகும். சைப் அலி கானின் பாட்டியான சஜிதா சுல்தான், போபாலை இறுதியாக ஆட்சி செய்த நவாப்பின் மகளாவார்.இச்சர்ச்சை தொடர்பில் கரீனா கபூர் அல்லது ரியா கபூர் இதுவரை உத்தியோகபூர்வமான பதிலளிப்பை வெளியிடவில்லை.இதற்கிடையில், திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில், இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் 2026ஆம் ஆண்டு வெளியான குற்றப் புலனாய்வுத் திரைப்படமான ‘தாய்ரா’ (Daayra) கரீனா கபூரின் அண்மைய திரைப்பட வெளியீடாகும். இதில் பிருத்விராஜ் சுகுமாரனும் நடித்திருந்தார்.அடுத்து, நடிகர் ஷாருக்கானின் வரவிருக்கும் அதிரடித் திரைப்படமான ‘கிங்’ (King) திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றில் கரீனா கபூர் தோன்றவுள்ளார்.(மூலம்: இந்தியா டுடே)








