நவம்பர் மாதத்தில் ஆசியாவின் சிறந்த பெறுமதியைப் பதிவு செய்த நாணயமாக இந்திய ரூபாய் உருவெடுத்துள்ளது.அமெரிக்க டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் பெறுமதி சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், வெளிநாட்டு முதலீடுகளின் வருகை மற்றும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவை இதற்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த புதன்கிழமை (18) இந்திய ரூபாய் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத உயர்ந்த பெறுமதியை எட்டியுள்ளது. இந்திய நிதிச் சந்தைகள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்துள்ளமையும் இந்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் போது அமெரிக்க டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் பெறுமதி 93.40 ஆக வலுப்பெற்றதுடன், வர்த்தக முடிவில் 93.47 ஆகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஏழு மாதங்களில் பதிவான மிக உயர்ந்த முடிவுப் பெறுமதியாகும்.
இந்த மாதத்தில் இதுவரை இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளன. இதுவும் இந்திய ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த உதவியுள்ளது.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்துள்ளமையும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியா, எரிசக்தி இறக்குமதிக்காக அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை குறைந்துள்ளதால் இதன் நன்மையைப் பெற்றுள்ளது.
இந் நிலையில், தெற்காசியாவின் ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதிகளில் ஒப்பீட்டளவில் சிறிய மாற்றங்களே பதிவாகியுள்ளன.
இலங்கையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி புதன்கிழமை ஒப்பீட்டளவில் நிலையாகக் காணப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.33 ரூபாயாகவும் விற்பனை விலை 337.23 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
எனினும், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தினசரி வர்த்தகத்தில் சிறிய முன்னேற்றங்களும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, பாகிஸ்தான் ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 276 முதல் 277 வரையான மட்டத்தில் ஒப்பீட்டளவில் நிலையாகக் காணப்படுகிறது. பங்களாதேஷ் டாக்காவின் பெறுமதி ஒரு அமெரிக்க டொலருக்கு சுமார் 125 ஆகப் பதிவாகியுள்ளது.
நேபாள ரூபாயும் இந்திய ரூபாயின் மீட்சியால் சாதகமான தாக்கத்தைப் பெற்றுள்ளது. இந்திய ரூபாயுடன் நிலையான மாற்று விகிதத்தைப் பேணுவதால் நேபாள நாணயத்தின் பெறுமதியும் இதன் மூலம் ஆதரவடைந்துள்ளது.
முன்னதாக இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் என முதலீட்டாளர்கள் மேற்கொண்டிருந்த கணிப்புகள் தற்போது மாற்றமடைந்துள்ளமையும், இந்திய நிதிச் சொத்துக்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளமையும் அதன் மீட்சிக்கு உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடுகளின் வருகையும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவதும் இந்திய ரூபாயின் பெறுமதிக்கு மேலும் ஆதரவளிக்கக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், சர்வதேச நிதிச் சந்தையின் நிலைமைகள் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து சவால்களாக அமையலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.







