ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் கடத்தல் நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் மொஹ்சென் ரெசாயி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க நிர்வாகம் இந்த நடவடிக்கைகளுக்காகக் கூலிப்படையினரைப் பயன்படுத்துவதாகவும், இதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராணுவம் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் (CENTCOM) தளபதி ஆகியோரும் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய ISNA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான மொஹ்சென் ரெசாயி, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக ட்ரம்ப் தினமும் கூறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அவர், “நீங்கள் எண்ணெயைக் கடத்துகிறீர்கள். ஆனால், ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை நாங்களே நிர்வகிக்கிறோம்” எனத் தெரிவித்ததாக ISNA செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சிறிய படகுகள் மூலம் எண்ணெய் பெரிய கப்பல்களுக்கு மாற்றப்படுவதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை ஈரான் ஒவ்வொரு இரவும் இலக்குவைத்து வருவதாகவும் ரெசாயி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராணுவம் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.








