இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் டிஜிட்டல் மாற்றம், வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்துக்கு அமெரிக்கா வழங்கவுள்ள புதிய ஆதரவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் மேகக் கணினி கட்டமைப்பு (Cloud Infrastructure) மற்றும் துறைமுகங்களை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இந்த ஒத்துழைப்பு அமெரிக்க நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
“அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் முதல் கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு வரையிலான பல்வேறு விடயங்களில், இரு நாடுகளின் நலன்களை முன்னேற்றுவதற்கான வலுவான செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல் எங்களிடம் உள்ளது” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.








