இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைப்பதற்கான இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்ததன் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை மறுசீரமைத்து, விளையாட்டுத்துறைக்கு புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இது அடுத்த கட்டமாகும்.
செப்டம்பர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஜூன் 8, 2026 அன்று ஆரம்பகட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் நிறுவல், ஆளுகை, கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்தல், ஊக்குவிப்பு, அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறையில் நல்லாட்சி, நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை வலுப்படுத்துவதும் இந்த சட்டமூலத்தின் நோக்கங்களில் அடங்குகிறது.
மேலும், கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலனைப் பாதுகாப்பதுடன், ஊழல் மற்றும் ஏனைய முறைகேடுகளில் இருந்து கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளையும் அறிமுகப்படுத்த இந்த சட்டமூலம் எதிர்பார்க்கிறது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு புதிய யாப்பை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்து, அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த சட்டமூலம் இதுவரை சட்டமாக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அது சட்டமாக அமுலுக்கு வரும்.








