இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஏப்ரல் மாதம் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திங்கட்கிழமை (21) தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், ஏற்றுமதியை அதிகரிப்பதுடன் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்தியா முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வருகிறது.
இரு நாடுகளும் திங்கட்கிழமை ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளன. நியூசிலாந்து வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லேவும், நியூசிலாந்துக்கான இந்திய உயர்ஸ்தானிகர் முவான்புயி சாயாவியும் நாடாளுமன்றத்தில் இதற்கான ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட பின்னர், நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்துக்கான வரிகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும்.
முதல் கட்டமாக, நியூசிலாந்தின் ஏற்றுமதிகளில் 57 சதவீதமானவை வரியின்றி இந்திய சந்தையை அணுகும். இதில் ஆட்டிறைச்சி, கம்பளி மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களும் அடங்குகின்றன. மேலும், வனவளம் மற்றும் மரப் பொருட்களின் ஏற்றுமதியில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை வரியின்றி அணுகலைப் பெறும்.
பின்னர் வரியில்லா வர்த்தகத்தின் அளவு 82 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், எஞ்சிய 13 சதவீத பொருட்களுக்கான வரிகளும் கணிசமாகக் குறைக்கப்படவுள்ளன.
இதனிடையே, இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரியில்லா அணுகலை வழங்கவும், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பயண மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான விதிகளை தளர்த்தவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.
ஆப்பிள், கிவி பழம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட பொருட்களுக்கான ஒதுக்கீட்டு அடிப்படையிலான முன்னுரிமை சந்தை அணுகலும் நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மதுபானமான வைன் மீதான வரி, பொருளின் மதிப்பைப் பொறுத்து அடுத்த 10 ஆண்டுகளில் 150 சதவீதத்திலிருந்து 25 அல்லது 50 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க இரு நாடுகளின் பிரதமர்களான கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 12 மாத காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள பின்னணியிலும் இந்தியா தனது ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய பொருளாதாரங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் அமெரிக்க சந்தையைச் சார்ந்திருப்பதை குறைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
(Reuters)








