போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பைப் பேணுவது ஆடம்பரமான விடயமல்ல என்றும், அது பேரண்ட பொருளாதார நிலைத்தன்மையின் இன்றியமையாத அங்கம் என்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியானது, போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாதபோது ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக எடுத்துக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடையும்போது, இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படுதல், கடன் திருப்பிச் செலுத்துவதில் சிரமம், நாணய மாற்று விகிதத்தின் மீதான அழுத்தம் மற்றும் பணவீக்க அழுத்தம் அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பொருளாதாரம் மற்றும் நாட்டின் மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது இந்த விளைவுகளை இலங்கை கடுமையாக எதிர்கொண்டதாகவும், அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பைப் பேணுவது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது என்பதே என்றும் அவர் குறிப்பிட்டார்.
நல்ல பொருளாதார காலங்கள் எப்போதும் நீடிக்காது என்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்காக கையிருப்புகளைத் திரட்டுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.








