எதிர்வரும் செப்டெம்பர் 22 முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் கூடும் அனைத்து தினங்களிலும் காலை 9.30 முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான பாராளுமன்ற அலுவல்களுக்கும், காலை 10.00 முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும், காலை 11.00 முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, காலை 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி தொடர்பிலும், பிற்பகல் 2.30 முதல் 5.00 மணி வரை ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலும் விவாதம் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமான ட்ரெட்சோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டின் பின்னர் சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 5.00 முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை, காலை 11.00 முதல் பிற்பகல் 5.00 மணி வரை இலங்கை ஊடக உயர்தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவகச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. பிற்பகல் 5.00 முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரக் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 11.30 முதல் மாலை 7.00 மணி வரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் பிரகாரம், குறித்த சட்டமூலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்பட்டதன் பின்னர், அதனை சபாநாயகர் சபையில் அறிவிப்பார் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், காலை 11.30 முதல் மாலை 7.00 மணி வரை குறித்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.








