யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவை நிலையான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவாக, கனரக இயந்திரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தீவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது.
இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் கடற்படைக் கப்பல்கள் மூலம், புங்குடுதீவு குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து டெல்ஃப்ட் தீவுக்கு குறித்த பொருட்கள் செப்டெம்பர் 6 மற்றும் 10ஆம் திகதிகளில் கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குடிநீர் வசதிகள், வீதி வலையமைப்பு, போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
டெல்ஃப்ட் தீவுக்கான அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை சுமுகமாக முன்னெடுப்பதற்கு தேவையான முக்கியமான தளவாட ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.








