மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தேரரை தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், பிணை நிபந்தனைகளாக,
- இனிமேல் எந்தவொரு அரச திணைக்களத்திற்கும் சென்று அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது.
- வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தக்கூடாது.
- சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
என நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், பிணை இரத்து செய்யப்பட்டு வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார் எனவும் நீதவான் எச்சரித்தார்.
கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பு சென்ட்ரல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேலும் நான்கு பேருடன் அத்துமீறி நுழைந்து, அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி அதிகாரிகளால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 7ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தேரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேரருடன் சம்பவத்தன்று சென்று தலைமறைவாகியிருந்த மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் அடுத்த விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.








