பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) டெல்லியில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டிற்கு இந்தியா நான்காவது முறையாக தலைமை ஏற்கிறது.
மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமது, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபாவோ சுபியான்டோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் மற்றும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (11) காலை டெல்லி வந்தடைந்தார்.
மொஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த புடினை, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி. சிங் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புடினை வரவேற்றது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அன்புடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.








