ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இதன்படி, இன்று (11) காலை உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பிரெண்ட் கச்சா எண்ணெய் பதிவுசெய்துள்ள அதிகூடிய விலை இதுவாகும்.
கடந்த ஜூலை 24ஆம் திகதிக்குப் பின்னர், செப்டெம்பர் 9ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை முதன்முறையாக 100 டொலர் எல்லையைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
இதேவேளை, பிரெண்ட் எண்ணெய் விலை உயர்வுக்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
மேலும், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.








