ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த “ஆத்திரமூட்டும் அல்லது விரோதமான” நடவடிக்கைகளுக்கு எதிராக, அந்த நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்க அல்ஜீரியா தீர்மானித்துள்ளது.
அபுதாபிக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதன் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை எட்டியுள்ளதாக அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திவிட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, இந்த முடிவு தொடர்பில் அறிவிக்கப்பட்டதுடன், அதனை நடைமுறைப்படுத்த 48 மணிநேர கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அல்ஜீரியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துவருவதால் மோசமடைந்து வந்துள்ளன.
இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு அல்ஜீரியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு இராச்சியமும் அல்ஜீரியாவின் பிராந்திய போட்டி நாடான மொராக்கோவும் 2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் மேற்கு சஹாரா விவகாரத்திலும் இரு நாடுகளும் எதிரெதிர் நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. மேற்கு சஹாரா மீது மொராக்கோ உரிமை கோருவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவளித்து வருவதுடன், அங்கு அந்நாடு துணைத் தூதரகத்தையும் கொண்டுள்ளது. மறுபுறம், சுதந்திரமான மேற்கு சஹாராவை கோரும் பொலிசாரியோ முன்னணிக்கு அல்ஜீரியா ஆதரவளித்து வருகிறது.
மேலும், சஹேல் பிராந்தியத்திலும் இரு நாடுகளின் நலன்கள் அதிகளவில் முரண்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் சஹேல் பிராந்திய அரசாங்கங்களுடன் ஐக்கிய அரபு இராச்சியம் தனது உறவுகளை விரிவுபடுத்தியுள்ள நிலையில், தொடர்ச்சியான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பின்னர் அல்ஜீரியாவின் தெற்கு அண்டை நாடுகளுடனான உறவுகள் சில பாதிக்கப்பட்டுள்ளன.
அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மஜீத் தெபூன், பிராந்தியத்தில் பல நாடுகளை சீர்குலைக்க முயலும் “சிறு நாடு” அல்லது “சிறு அரசாக” ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது உரைகளில் அடிக்கடி விமர்சித்து வந்துள்ளார்.
“அவர்கள் எங்கு காலடி எடுத்து வைத்தாலும் இரத்தம் சிந்துகிறது. எங்கள் நாட்டில் இரத்தம் சிந்தாத வகையில் அவர்கள் விலகி இருக்க வேண்டும்” என அவர் கடந்த ஜூலை மாதம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அப்போது, அரபு உலகில் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதைத் தவிர்க்க அல்ஜீரியா முயற்சித்திருக்காவிட்டால், இராஜதந்திர உறவுகளை துண்டிக்கும் நடவடிக்கை நீண்ட காலத்திற்கு முன்னரே இடம்பெற்றிருக்கும் என்றும் ஜனாதிபதி தெபூன் தெரிவித்திருந்தார்.
மூலம்: அல் ஜசீரா








