சமூக ஊடகங்களில் பயனர்களுக்குக் காண்பிக்கப்படும் உள்ளடக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், சமூக ஊடகங்களில் தங்களுக்குக் காண்பிக்கப்படும் உள்ளடக்கங்கள் அல்கோரிதம் மூலம் பரிந்துரைக்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதை ஒவ்வொரு அவுஸ்திரேலியரும் தெரிவுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக, TikTok, Instagram மற்றும் Facebook போன்ற சமூக ஊடகத் தளங்கள், தங்களது கணக்குதாரர்களுக்கு Push Notification ஒன்றை அனுப்பி, அல்கோரிதம் மூலம் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கங்களைப் பெற விரும்புகிறார்களா என்பதைத் தெரிவுசெய்யும் வசதியை வழங்க வேண்டும் என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
சமூக ஊடக அல்கோரிதம் மீதான இந்தக் கட்டுப்பாடுகள், பரந்த அளவிலான ‘Digital Duty of Care’ எனப்படும் சட்ட வரைவின் ஒரு பகுதியாகும்.
இதன் மூலம், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையத்தில் ஏற்படக்கூடிய எதிர்பார்க்கக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அவற்றின் மீது சுமத்தப்படவுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், 100 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிகமான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை, இணையத் துன்புறுத்தல், ஆபாச உள்ளடக்கம், பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் உணவுக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்தப் பொறுப்பு கவனம் செலுத்தும்.
வயது வந்தவர்களைப் பொறுத்தவரை, குற்றச்செயல்கள், வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்களில் இந்தச் சட்டம் கவனம் செலுத்தும்.
செவ்வாய்க்கிழமை (08) ஆலோசனைக்காக வெளியிடப்பட்ட சட்ட வரைவின்படி, அல்கோரிதம் மூலம் பரிந்துரைக்கப்படும் பதிவுகள் மற்றும் காணொளிகளைக் கொண்ட Feed-ஐப் பயன்படுத்துவதா அல்லது தாங்கள் பின்தொடரும் கணக்குகளின் உள்ளடக்கங்களை மட்டுமே கொண்ட Feed-ஐப் பயன்படுத்துவதா என்பதை அவுஸ்திரேலியர்கள் தெரிவுசெய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
“தொழில்நுட்பம் நம்மை வடிவமைக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, அதை சிறந்த முறையில் வடிவமைக்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.









