* இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் ஒன்றை இலக்குவைத்ததைத் தொடர்ந்து, ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
* ஜோர்தானில் உள்ள அல்-அஸ்ராக் இராணுவத் தளத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
* அமெரிக்கா பல ஈரானிய எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எண்ணெய் கப்பல்களின் பணியாளர்கள் கப்பல்களை விட்டு வெளியேறுமாறு ஈரானின் IRGC எச்சரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள கப்பல்கள் இலக்குவைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
* அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்த முயற்சிக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
* அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதாகவும், ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாகப் பறந்த MQ-1 ஆளில்லா விமானத்தை தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
* ஈரானுடனான போரில் மேலும் 30 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக பென்டகனின் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் தரவுத்தளம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மோதல் தொடங்கியதிலிருந்து காயமடைந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 820 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆகவும் அதிகரித்துள்ளது.
* 27 ஈரானிய விமான நிறுவனங்கள் மீது தடைகள் விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், அந்த நிறுவனங்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
* ஈரான் அரசாங்கத்தின் விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய 36 நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தனது பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா கைவிடாது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
* சமீபத்திய அமெரிக்கத் தடைகளை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நிராகரித்துள்ளார். போரின் இலக்குகளை அடையத் தவறிய நிலையில், அமெரிக்கா மேலும் தடைகளை விதிப்பதை நாடுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
* ஹூதிகள் தங்களது ஆக்கிரமிப்புச் செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என யேமனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போதைய மோதலை ஹூதிகளே தொடங்கியதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
* தெற்கு லெபனானின் ஆக்கிரமிக்கப்படாத அனைத்து பகுதிகளிலும், நபதியே பிராந்தியம் உட்பட, லெபனான் இராணுவப் பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.








