தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிரித்தானியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
நேற்று (10) இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், டுபாய் வழியாக லண்டன் செல்லவுள்ளார். விஜய் தலைமையிலான குழு எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி தமிழகம் திரும்பவுள்ளது.
இந்தக் குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட அரச அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக, பிரித்தானிய நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்கனவே உள்ள முதலீடுகளை விரிவுபடுத்துவது மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு விஜயின் பயணம் முக்கியத்துவம் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பிரித்தானியாவில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் ‘உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ‘Silverstone Motor Racing Circuit’-ஐ விஜய் பார்வையிடவுள்ளார்.
இதன்போது, மோட்டார் பந்தய சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு கட்டமைப்புகள், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான தொழில்துறை வாய்ப்புகள் குறித்து அவர் நேரில் அறிந்துகொள்ளவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.








