சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகிறது.
‘மக்கள், பூமி மற்றும் வளமான வாழ்விற்கான எழுத்தறிவு’ என்பது இம்முறை சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருப்பொருளாகும்.
யுனெஸ்கோ அமைப்பின் கூற்றுப்படி, உள்ளடக்கம், மேம்பாடு, நிலையான எதிர்காலத்தை ஆதரித்தல், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் எழுத்தறிவின் பங்களிப்பை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யுனெஸ்கோவின் 14ஆவது பொது மாநாட்டில் சர்வதேச எழுத்தறிவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்படி, முதலாவது சர்வதேச எழுத்தறிவு தினம் 1967ஆம் ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது.
அன்று முதல் அரசுகள், கல்வியாளர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் செப்டெம்பர் 8ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆறு தசாப்தங்களில் எழுத்தறிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், உலகளவில் எழுத்தறிவில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் சவால்களை ஆராய்வதற்கும் இம்முறை தினம் வாய்ப்பளிக்கிறது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
உலகளாவிய எழுத்தறிவு மட்டங்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், இன்னும் பெரிய இடைவெளிகள் காணப்படும் நிலையிலேயே இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில், உலகளவில் 739 மில்லியன் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அடிப்படை எழுத்தறிவுத் திறன்கள் இன்றி உள்ளனர் என யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், 10 குழந்தைகளில் நான்கு பேர் வாசிப்பில் குறைந்தபட்ச தேர்ச்சியைக்கூட அடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இம்முறை கருப்பொருள் எழுத்தறிவை தனிநபரின் அடிப்படைத் திறனாக மட்டுமன்றி, பரந்த சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய அம்சமாகவும் முன்னிறுத்துகிறது.
இதேவேளை, இலங்கையில் எழுத்தறிவு விகிதம் 97.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையர்களின் டிஜிட்டல் மற்றும் கணினி எழுத்தறிவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 5 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் டிஜிட்டல் எழுத்தறிவு 67.6 சதவீதமாகவும், கணினி எழுத்தறிவு 34.7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.









