இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது கையொப்பமிடப்பட்ட இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இந்த விஜயத்தின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ராஜ்நாத் சிங் பயணிக்கும் நேரங்களில் கொழும்பு நகரின் பல முக்கிய வீதிகளில் சந்தர்ப்பத்திற்கேற்ப போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









