பொரளை, டட்லி சேனநாயக்க மாவத்தையில் சேதமடைந்திருந்த பிரதான வடிகால் குழாயின் திருத்தப் பணிகள் 24 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தில் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த வீதி மீண்டும் வாகனப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெல்லி பால்தசார் (Vraie Cally Balthazaar) சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (20) குறித்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடைக்கு, 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அழுத்த வடிகால் பிரதான குழாயில் ஏற்பட்ட பழுதே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழமையான உட்கட்டமைப்பு மற்றும் திருத்தப் பணிகளின் சிக்கலான தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும், கொழும்பு மாநகர சபையின் வடிகாலமைப்புப் பிரிவு உடனடியாகச் செயற்பட்டு குழாயைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 24 மணித்தியாலங்களுக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்த மாநகர சபை ஊழியர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
“இது உங்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படும் விதம்!” எனக் குறிப்பிட்ட மேயர், அத்தியாவசிய உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்குப் பொதுமக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த வீதி மீண்டும் வாகனப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.








