பிரபல பரோபகாரியான நஹில் விஜேசூரிய, மீரிகமவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசிய சிறுநீரகக் கல் பரிந்துரை சிகிச்சை நிலையத்திற்கு ரூ.161 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த நிலையம் முழுமையாகச் செயற்படத் தொடங்கிய பின்னர், வருடாந்தம் 1,000க்கும் மேற்பட்ட சிக்கலான சிறுநீரகக் கல் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மட்டத்திலான சிகிச்சை நிலையமாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் சிறுநீரக மற்றும் சிறுநீரகப்பாதை அறுவை சிகிச்சை நிபுணர்கள், தங்களது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இங்கு உள்ள நவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்த முடியும்.
இந்த நிலையத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள் அரச சுகாதார சேவையின் ஊடாக இலவசமாக வழங்கப்படவுள்ளன.இலங்கை சிறுநீரக மற்றும் சிறுநீரகப்பாதை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், சில மாதங்களுக்குள் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிக்கலான சிறுநீரகக் கல் நோயாளர்களுக்கான சிகிச்சை முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதுடன், நாடு முழுவதும் பணியாற்றும் சிறுநீரக சிகிச்சை நிபுணர்களுக்கு ஆதரவளிப்பதும் இந்த நிலையத்தின் நோக்கமாகும்.
நிபுணத்துவ மருத்துவ அறிவு, நவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் இலவச சிகிச்சை வசதி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தேசிய வளமாக இந்த நிலையம் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









