காலி, உனவட்டுன – ருமஸ்ஸல பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், இரண்டு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ.250,000 இலஞ்சம் கோரி பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஹபராதுவ, காலி பகுதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அஹங்கம பகுதியைச் சேர்ந்த குறித்த அதிபர், 2026ஆம் ஆண்டுக்கான தரம் 1 மற்றும் தரம் 8 வகுப்புகளில் இரண்டு மாணவர்களை சேர்ப்பதற்காக ஆரம்பத்தில் ரூ.600,000 இலஞ்சமாக கோரியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பின்னர் அந்தத் தொகை ரூ.300,000 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதில் ரூ.150,000 ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொகையைப் பெற்ற பின்னரும் சந்தேகநபர் மேலதிக பணம் கோரி வந்ததுடன், பணம் வழங்காவிட்டால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என அச்சுறுத்தியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மேலும் ரூ.250,000 இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.









