மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக தாமதமடைந்த 10,000 ரயில் தண்டவாளங்கள் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது குறித்த தண்டவாளங்களை துறைமுகத்தில் இருந்து இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் சுமார் 5,000 தண்டவாளங்கள், தற்போது வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கரையோர ரயில் பாதையின் சில பகுதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையிலான ரயில் பாதையில் சுமார் 50 இடங்களில் தண்டவாளங்களை மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய சுமார் ஆறு மாதங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 2,000 மில்லியன் ரூபாய் உள்நாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டவாள புனரமைப்புப் பணிகளுடன் இணைந்து ரயில்வே பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், கரையோர ரயில் பாதையில் தினசரி ஏற்படும் ரயில் தாமதங்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.









