கொழும்பில் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள 121 மெட்ரோ பேருந்துகளும் செப்டெம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகும் ஒரு வருட காலத் திட்டத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கட்டமாக 10 மெட்ரோ பேருந்துகளுடன் முன்னெடுக்கப்பட்ட சேவை பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனினும் இதனை இன்னும் முன்னோடித் திட்டமாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது பேருந்துகளைப் பயன்படுத்தும் பயணிகளை ஈர்ப்பது மாத்திரமன்றி, தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவோரை பொதுப் போக்குவரத்துக்கு மாற்றுவதே மெட்ரோ பேருந்துத் திட்டத்தின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக சுமார் 240 பேருந்து நிறுத்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் பயணிகள் தங்களது கார்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மெட்ரோ பேருந்து மூலம் பயணத்தைத் தொடரும் வகையிலான “வாகன நிறுத்தி – பயணம் தொடரும்” (Park-and-Ride) வசதியை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் காணி உரிமையாளர்கள், மெட்ரோ பேருந்து பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான வாகன நிறுத்துமிடங்களை அமைப்பதற்கான அடிப்படை வழிகாட்டுதல்களை மெட்ரோ நிறுவனம் வழங்கும் என்றும், அவற்றை பதிவு செய்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நகர அபிவிருத்தி அதிகாரசபை எதிர்வரும் சில மாதங்களில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலி மூலம் மெட்ரோ பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள பதிவு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அங்கு நிகழ்நேரத்தில் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை பயணிகள் அறிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே வாகன நிறுத்துமிடங்களின் நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், ஒரு வாகன நிறுத்துமிடம் நிரம்பியிருந்தால் மாற்று இடங்களையும் அடையாளம் காண முடியும்.
வாகன நிறுத்தக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களே தீர்மானிக்கும் என்றும், இணையவழி கட்டணச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பேருந்து நிறுத்தங்களைச் சுற்றி போதுமான வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்படுவதே, தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவோரை பொதுப் போக்குவரத்துக்கு மாற்றும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.









