அனுராதபுரத்தில் உரிய இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழின்றி மின் கம்பி ரீல்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய பல்பொருள் அங்காடிக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ.2 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
அனுராதபுரம் 11ஆம் வீதியில் அமைந்துள்ள குறித்த பல்பொருள் அங்காடியில் கடந்த 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, SLS சான்றிதழ் இல்லாத மின் கம்பி ரீல்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த குற்றம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கு கடந்த 21ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த பல்பொருள் அங்காடிக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மின் கம்பி ரீல்கள் உள்ளிட்ட மின்சாரப் பொருட்கள் உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்வது நுகர்வோர் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தரமற்ற மின்சாரப் பொருட்களின் பயன்பாடு மின்சார அதிர்ச்சி, மின் கசிவு மற்றும் தீ விபத்துகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.









