கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, 2ஆம் நாள் ஆட்டம் முடிவடையும் போது 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறி வருகிறது. இதன் மூலம் இந்திய அணியை விட 495 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி, 2ஆம் நாளிலும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தது.
இந்திய அணியின் துருவ் ஜூரெல் சிறப்பாக விளையாடி 177 பந்துகளில் 115 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முன்னதாக காயம் காரணமாக தற்காலிகமாக வெளியேறியிருந்த ரிஷப் பந்த் மீண்டும் களமிறங்கி அதிரடியாக 63 ஓட்டங்களைச் சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கேசர நுவந்த மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உடாரா 1 ஓட்டத்துடன் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ஓட்டங்களுடன் மானவ் சுதரின் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மந்தமான வெளிச்சம் காரணமாக 2ஆம் நாள் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டபோது, கமில் மிஷார 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.









