இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக நியூயோர்க்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மீட்பு மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டங்கள், தேசிய நல்லிணக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் வகையில் சர்வதேச நிதிக் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை வழங்கி வரும் பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘டித்வா’ (Ditwah) புயலின் தாக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார நிலைத்தன்மையை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.








