ஐ.ஏ. காதிர் கான்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளின்போது அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் தனிநபர் சட்டமூலம் ஒன்றை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பான தனது நோக்கத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக (திருத்த) சட்டமூலத்தின் ஊடாக, பதிவு செய்யப்பட்ட அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விரிவான முன்பயணப் பயிற்சியை கட்டாயமாக்குவது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில், அவர்கள் தொழில் புரியச் செல்லும் நாடுகளின் சட்டங்கள், கலாசார நடைமுறைகள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான சட்ட ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு வழங்குவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் முக்கிய அம்சமாக, வெளிநாடுகளில் சிரமங்களை எதிர்கொள்வதாக உறுதிப்படுத்தப்படும் பதிவு செய்யப்பட்ட இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரச நிதியுதவியுடன் சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்துவது முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட நாட்டில் சட்டப் பணிகளை முன்னெடுக்கத் தகுதியுடைய சட்டத்தரணிகள் மூலம் சட்டப் பிரதிநிதித்துவம் வழங்குதல், அதற்கான சட்டச் செலவுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பொருளாதார வகுப்பு விமானப் பயணச்சீட்டு உள்ளிட்ட நாடு திரும்புவதற்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்றல் ஆகியவை முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், அவசர மருத்துவ அனுமதி மற்றும் பயண ஏற்பாடுகள் உள்ளிட்ட தேவையான உதவிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டியிருக்கும்.
ஒரு புலம்பெயர் தொழிலாளர் சிரமத்தில் இருப்பதாகக் கருதப்படுவதற்கான சூழ்நிலைகளையும் இந்தச் சட்டமூலம் வரையறுத்துள்ளது.
இதன்படி, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான சம்பளம் வழங்கப்படாமை, ஆவணப்படுத்தப்பட்ட உடல், உளவியல் அல்லது பாலியல் துஷ்பிரயோகம், வேலைவாய்ப்பு ஒப்பந்தம் முன்கூட்டியே அல்லது சட்டவிரோதமாக நிறுத்தப்படுதல், அத்துடன் தொழில் புரியும் நாட்டில் ஆயுத மோதல்கள், கடுமையான அரசியல் நெருக்கடிகள் அல்லது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுதல் ஆகியவை இத்தகைய சூழ்நிலைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேவேளை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உதவி, சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பான நாடு திரும்புதல் தொடர்பான விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்தவும் சட்டமூலம் முன்மொழிகிறது.
இவ்விண்ணப்பங்களைப் பரிசீலித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்றை நிறுவுவதற்கும் அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், வெளிநாடுகளில் சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர சட்ட உதவி மற்றும் பாதுகாப்பான நாடு திரும்புதல் ஆகியவற்றை வழங்குவது அரசாங்கத்தின் சட்டபூர்வ கடமையாக மாற்றப்படும்.
இதன் மூலம், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், அவசர நிலைமைகளைக் கையாள்வதற்கான நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளும் விரிவடையும்.
இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.
மேலும், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் இலங்கையர்களுக்கும் இந்தத் திருத்தங்கள் பொருந்தும் என முன்மொழியப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில், புதிய 48A பிரிவை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த உரிமைகள் மற்றும் கடமைகளை உள்ளடக்குவதே சட்டமூலத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த சட்டமூலத்தை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பைஸர் முஸ்தபா நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர் அனோஜன் சிவராசின் வழக்கில் அவர் தலையிட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான பாதுகாப்புகளை வலுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக இந்தச் சட்டமூலம் அமைந்துள்ளது.
அனோஜன் சிவராசின் மேன்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கை சட்டக் குழுவில் பைஸர் முஸ்தபாவும் இடம்பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் அனோஜன் சிவராசுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.








