யானை கவன்திஸ்ஸவின் உயிரிழப்புக்கு குடல் முறுக்கல், அதனுடன் தொடர்புடைய கடுமையான தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலை (Septic Shock) மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல உறுப்பு பாதிப்புகளே காரணம் என இடைக்கால பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
யானை கவன்திஸ்ஸவின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கல்கமுவ நீதவான் ரவீந்திர ரஞ்சன் பண்டார இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.ஆர்.எம்.கே.கே. விஜேசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கையே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கவன்திஸ்ஸவின் வலது காலில் மூன்று நீண்டகால காயங்கள் காணப்பட்டுள்ளன. எனினும், அக்காயங்களுக்குள் துப்பாக்கிச் சன்னங்கள் அல்லது தோட்டாக்களின் சிதறல்கள் எவையும் கண்டறியப்படவில்லை.
எவ்வாறாயினும், யானையின் வலது பக்க வயிற்றுப் பகுதி மற்றும் மார்புச் சுவர்களில் மூன்று துப்பாக்கிச் சன்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை உட்புற உறுப்புகளுக்கோ எலும்புகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான விடயங்கள் மேலும் ஆராயப்பட வேண்டிய கேள்விகளை எழுப்புவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யானையின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கவும், மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும் சட்டத்தரணிகளான ரோஹித ராஜகருணா, பாலகிருஷ்ணன் பிரியங்கா ஆகியோர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதும் பண்டார சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, கவன்திஸ்ஸவின் உயிரிழப்புக்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமே பொறுப்புக்கூற வேண்டும் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் யானைகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், வனஜீவராசிகள் அதிகாரிகள் தமது சட்டரீதியான மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கால்நடை மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் கவன்திஸ்ஸவுக்கு போதிய தொடர் சிகிச்சையும் கண்காணிப்பும் வழங்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிகிச்சைக்குப் பின்னர் யானை குணமடைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டியிருந்த நிலையில், அதன் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி ரோஹித ராஜகருணா, யானைக்கு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, வயிற்றின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட காயங்கள் யானை தரையில் படுத்திருந்தபோது ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கவன்திஸ்ஸவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைத்து, அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மிகலேவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.எஸ். வீரக்கோன், கவன்திஸ்ஸவைப் பாதுகாப்பதற்கும் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வனவிலங்கு அதிகாரிகள் மீது முன்வைக்கப்படும் அலட்சியக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், அவை ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.








