கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்புக்கு இடையூறாக உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர முதல்வர் வ்ரேய் காலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கட்டுமானங்கள் கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெரும் சவாலாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கட்டுமானங்கள் நீரின் சீரான ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதுடன், வடிகால் கால்வாய்களைச் சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் இடையூறாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொழும்பு மாநகர சபை வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், இத்தகைய தடைகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தங்களது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்களைத் தாமாக முன்வந்து அகற்றுவதற்குச் சில வீட்டு உரிமையாளர்களும் நிறுவனங்களும் எடுத்துள்ள தீர்மானத்தை அவர் வரவேற்றுள்ளார்.
அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள மாநகர முதல்வர், கொழும்பின் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஏனைய குடியிருப்பாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் இதேபோன்று ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








