நீர்கொழும்பு, வேபட வீதியில் 33 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (06) அதிகாலை 3.00 மணியளவில், குறித்த நபர் நீர்கொழும்பு வேபட வீதியில் கட்டுவபிட்டிய நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி மற்றும் குத்தி தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தெமங்ஹந்திய, கதிரான வடக்கு, எட்டபகஹவத்த பகுதியைச் சேர்ந்த தம்மிடகே சந்தன பிரசன்ன பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் சாவி ஆகியன சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இரண்டு வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரின் பதிவு இலக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








