நாட்டில் சமையல் எரிவாயுவுக்கான சந்தைத் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (27) வரை நாடளாவிய ரீதியில் 7 இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், எரிவாயு விநியோகத்தைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நாளிதழான தினமினவுக்கு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வந்தடைந்த நிலையில், ஒக்டோபர் 24ஆம் திகதி GOODWILL கப்பல் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது. அத்துடன், இன்று (26) மற்றுமொரு எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி கிடைத்த 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவைப் பயன்படுத்தி, ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சந்தையில் போதுமான எரிவாயு இருப்பு காணப்படும் எனவும், இதன் மூலம் நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உறுதியளித்துள்ளது.








