அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான விமான நிலையத்திலிருந்து முதலாவது சர்வதேச விமானம் திங்கட்கிழமை (26) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திட்டமிடலின் பின்னர் திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் செயற்பட்டு வரும் சிட்னியின் பிரதான விமான நிலையத்துக்கு மாற்றுத் தெரிவாக அமைந்துள்ளது.
நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரிலிருந்து வந்த ஏர் நியூசிலாந்து விமானம் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. இதன் மூலம் சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கான வாரத்தில் மூன்று தடவைகள் முன்னெடுக்கப்படும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையமொன்றின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு நாளும் கிடைப்பதில்லை” என ஏர் நியூசிலாந்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி கேட் பொயர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சிட்னியின் மேற்கு பகுதியில் 25 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் சிறப்பம்சங்களை அறிந்துகொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விமான நிலையம் மற்றுமொரு நுழைவாயிலாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றை ஓடுபாதையைக் கொண்ட இந்தப் புதிய விமான நிலையம், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பெரிய விமானப் போக்குவரத்து மையமாகும். இங்கு ஞாயிற்றுக்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூலை மாதம் சரக்குப் போக்குவரத்துச் சேவைகளும் தொடங்கப்பட்டன.
சிட்னியின் பிரதான விமான நிலையமான கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித் விமான நிலையம், அவுஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும். அதன் மூன்று ஓடுபாதைகள் ஊடாக கடந்த ஆண்டு 4 கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர்.
நகர மையத்திலிருந்து ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் பொட்டனி விரிகுடாவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில், விமானங்களின் இரைச்சல் நகரின் பல குடியிருப்புப் பகுதிகளிலும் கேட்கக்கூடியதாக உள்ளது. அத்துடன், இரவு நேரங்களில் பயணிகள் விமானங்கள் இயங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும், சிட்னியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தில் இத்தகைய நேரக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
“24 மணி நேரமும் செயற்படுவதன் மூலம், சர்வதேச விமானப் போக்குவரத்து மையங்களுடன் இணைப்புகளை ஏற்படுத்துவதில் விமான நிறுவனங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிப்பதில் பயணிகளுக்கு அதிக தெரிவுகளையும் இந்த விமான நிலையம் வழங்குகிறது” என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சைமன் ஹிக்கி தெரிவித்துள்ளார்.
தற்போது கோல்ட் கோஸ்ட், மெல்பர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்கான உள்நாட்டு விமான சேவைகளை ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
மேலும், கட்டார் எயார்வேஸ் 2027 டிசம்பர் மாதத்திலும், பிஜி எயார்வேஸ் 2027 மார்ச் மாதத்திலும், வியட்ஜெட் எயார் 2027 ஜனவரி மாதத்திலும் இந்த விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 530 கோடி அவுஸ்திரேலிய டொலர் (370 கோடி அமெரிக்க டொலர்) செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை வீதி வழியாகச் சென்றடைய முடியும். எனினும், நேரடி ரயில் இணைப்பு 2027 டிசம்பர் மாதத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய விமான நிலையம் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு “புதிய அத்தியாயத்தை” உருவாக்கியுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
சிட்னியின் புகழ்பெற்ற துறைமுகம் மற்றும் மத்திய வர்த்தகப் பகுதியை மையமாகக் கொண்டிருந்த பொருளாதார வளர்ச்சியை, மேற்கு சிட்னி பகுதிக்கும் விரிவுபடுத்துவதற்கு இந்த விமான நிலையம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீண்ட காலமாக சிட்னி நகரம் துறைமுகம் மற்றும் மத்திய வர்த்தகப் பகுதியை நோக்கியே கவனம் செலுத்தி வந்துள்ளது. தற்போது இந்தத் திட்டம், மக்கள் வாழும் இடங்கள், வேலைவாய்ப்புகள் உருவாகும் பகுதிகள் மற்றும் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் மேற்கு சிட்னி பகுதியை நோக்கி அந்தக் கவனத்தைத் திருப்புகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
CNA / AFP







