மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதன்படி, உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய அளவுகோலான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெயின் விலை, 3.55 அமெரிக்க டொலரால் (3.14%) அதிகரித்து 116.72 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
உலகளவில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவற்றின் விலை, பிரெண்ட் ரக எண்ணெயின் விலையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 29ஆம் திகதிக்குப் பின்னர், கடந்த ஆறு மாதங்களில் பதிவான மிக உயர்ந்த விலையாக இது அமைந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக கச்சா எண்ணெயின் விலை, 3.80 அமெரிக்க டொலரால் (3.8%) அதிகரித்து 103.27 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதன் மூலம், இந்த வாரத்தில் மாத்திரம் பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தாலும், WTI ரக எண்ணெயின் விலை 2.3 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவுக்கும், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியா மீதான தாக்குதல்களும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவும் இந்த விலை உயர்வுக்கான முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






