பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் மூத்த மகனும் செனட்டருமான ஃப்ளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து, தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகள் மற்றும் முதல் சுற்றுத் தேர்தல் முடிவுகளுக்கு மாறாக, 80 வயதான லூலா டா சில்வா இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1980களில் பிரேசிலில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்ட பின்னர், முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்துப் பின்னர் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்ற முதல் தலைவராக லூலா திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், லூலாவின் வெற்றி பிராந்திய அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
மேலும், போல்சனாரோ குடும்பத்துக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசியல் ஆதரவு முயற்சிகளையும் மீறி லூலா வெற்றி பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், லூலாவின் புதிய ஆட்சிக்காலம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணிகள் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், சட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்சியை முன்னெடுப்பதிலும் லூலா கடும் சவால்களைச் சந்திக்க நேரிடலாம்.
அத்துடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 82 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படும் பொதுக் கடன் சுமையும், 2.3 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதமும் அவரது ஆட்சிக்காலத்தில் முக்கிய சவால்களாக அமையக்கூடும்.








