இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ள போதிலும், இதுவரை வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், களு கங்கை மற்றும் களனி கங்கையின் சில பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு நீர்மட்டம் அதிகரிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், நில்வளா கங்கை, கின் கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயா உள்ளிட்ட ஏனைய ஆறுகளிலும் நீர்மட்டம் சாதாரண அளவிலேயே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதால் தெதுரு ஓயா மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,300 கன அடி நீரும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 2,300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரெனப் பெய்யும் பலத்த மழை காரணமாகத் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








