காலி – மாத்தறை பிரதான வீதியில், அஹங்கம கத்தொலுவ சந்திக்கு அருகில் இன்று (26) காலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ், எதிர்த்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொலிஸார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன், சுவ செரிய அம்பியுலன்ஸ் சேவை மூலம் காலி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







