இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஈய-அமில மின்கலங்களை மீள்சுழற்சி செய்யும் செயற்பாடுகளின்போது, முறையான அகற்றல் நடைமுறைகள் இன்றி ஆண்டுதோறும் 5,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான கந்தக அமிலம் (sulfuric acid) சுற்றுச்சூழலில் கலப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (Centre for Environmental Justice – CEJ) சனிக்கிழமை (24) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட மின்கலங்களிலிருந்து வெளியேறும் கந்தக அமிலம் மண்ணிலும் சுற்றுச்சூழலிலும் கலப்பது இலங்கையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மின்கலங்களை மீள்சுழற்சி செய்யும் செயற்பாட்டின்போது உருவாகும் கழிவுகள், குறிப்பாக உலோகக் கசடுகள் மற்றும் அகற்றப்படும் அமிலம் ஆகியவற்றில் ஈயம், காட்மியம் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை முழுவதும் முறையான மற்றும் முறைசாரா வகையில் இயங்கும் 2,000 இற்கும் மேற்பட்ட ஈய உருக்குத் தளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் போதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது மின்கல அமிலம் மற்றும் கழிவுகளை அகற்றும் நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படாமையும் ஒழுங்குபடுத்தப்படாமையும் முக்கிய கவலையாக உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மின்கல அமிலம் மற்றும் கழிவுகளைச் சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவதுடன், நடைமுறையிலுள்ள சுற்றுச்சூழல் சட்டங்களைத் தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே தலைமையில் இணையவழியாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது இந்தக் கவலைகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது, இந்தியாவின் டொக்ஸிக்ஸ் லிங்க் (Toxics Link) அமைப்பைச் சேர்ந்த அல்டா டுபே மற்றும் சிலோன் வேஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சுதேஷ் நந்தசிறி ஆகியோர் விளக்கவுரைகளை நிகழ்த்தினர்.
ஈய நச்சுத்தன்மை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இதற்கிடையில், ஈய நச்சுத்தன்மையைத் தடுப்பதற்கான உலகளாவிய நடவடிக்கை வாரத்தை முன்னிட்டு, ஒக்டோபர் 18 முதல் 24ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் முன்னெடுத்தது.
“கண்டறிதலிலிருந்து தடுப்புக்கு” (From Detection to Prevention) என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக, மின்னணுக் கழிவுகள் மற்றும் ஈயத்தின் வெளிப்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கும் கொலன்னாவை நகர சபையின் கழிவகற்றல் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அத்துடன், டிஜிட்டல் ஊடகங்கள் ஊடாகவும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு ஈய நச்சுத்தன்மையால் கடும் பாதிப்பு
ஈயத்தின் வெளிப்பாடு காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான சுகாதாரப் பாதிப்புகள் குறித்தும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கவனம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக, குழந்தைகள் ஈய நச்சுத்தன்மையால் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகவும், ஈயத்தின் எந்தவொரு அளவிலான வெளிப்பாடும் பாதுகாப்பானது எனக் கருதப்படுவதில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாகக் குழந்தைகளை ஈய நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாத்து பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தியுள்ளது.








