வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, வட அகலாங்கு 15.3° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 89.7° பகுதியில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தொகுதி மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (26) சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இது, நாளை (27) தீவிர சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளி அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதன் காற்றுச் சுழற்சியின் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்.
இதற்கமைய, வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








