குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய தினசரி தேடுதல் நடவடிக்கையில் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 33,024 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 135 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 65 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 68 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,189 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









