தம்புள்ளையில் குறிக்கப்பட்ட விலையான ரூ.100க்கு பதிலாக குடிநீர் போத்தல் ஒன்றை ரூ.300க்கு விற்பனை செய்த ஹோட்டல் ஒன்றுக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிகிரியா கிங்டம் ரிசோர்ட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
தம்புள்ளை, விஹார சந்தி, ரத்மல்கஹஎல வீதியில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலில், 2025 ஜனவரி 2ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தளை மாவட்ட அலுவலக விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டது.
இதன்போது, ரூ.100 என குறிக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்று ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று (23) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது. இதையடுத்து நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்தது.
எனினும், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.100 என்பது தற்போது நடைமுறையில் உள்ள குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை (MRP) அல்ல என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
2026 ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட 2492/29 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம், உள்நாட்டில் பொதியிடப்படும் போத்தல் குடிநீருக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை போத்தலின் கொள்ளளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அதிகபட்ச சில்லறை விலைகள்:
• 500ml – 999ml: ரூ.80
• 1L – 1.499L: ரூ.120
• 1.5L – 1.999L: ரூ.150
• 2L – 2.499L: ரூ.180
• 5L – 6.999L: ரூ.400
இதன்படி, 1 லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரையிலான குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.120 ஆகும்.
ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் குடிநீர் கொள்வனவு செய்யும் போது, போத்தலின் கொள்ளளவுக்கு ஏற்ப நடைமுறையில் உள்ள அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்த்து, பற்றுச்சீட்டு அல்லது ரசீதைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்களை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யக்கூடாது என ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் அதிகார சபை நினைவூட்டியுள்ளது.
அதிக விலை வசூலித்தல் உள்ளிட்ட சந்தை முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யலாம்.







