மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகின்றது.
நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழையால், நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வான்வழியாக நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.
அதேவேளை, தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் கொத்மலை ஓயாவை அண்மித்த பகுதிகள், நீர்த்தேக்கங்களுக்குக் கீழ் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் நிலவும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் இன்று (24) காலை 11 மணியளவில் முன்கூட்டியே மூடப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, பல பகுதிகளில் கடும் பனிமூட்டம், பலத்த காற்று மற்றும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதிகளில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் போது மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அபாயங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







