பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குக் கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்படும் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம், வடக்கு நோக்கி சாய்வாக வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்றைய (15) தினத்திற்குள் தாழமுக்கமாக வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வளிமண்டலத் தொகுதி நாளைய (16) தினத்திற்குள் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் புயலாக வலுவடையக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, வடக்கு அகலாங்கு 5 முதல் 15 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடல் பிராந்தியங்களிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே குறித்த கடல் பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








