இலங்கையின் புகழ்பெற்ற பாடகி விஷாரத கலாநிதி நந்தா மாலினியின் மறைவையடுத்து, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை இசை மற்றும் கலாசாரத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த தேசிய துக்க தினங்கள் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
82 வயதான நந்தா மாலினி நேற்று (20) வியாழக்கிழமை நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது பூதவுடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக நாளை (21) காலை 10 மணி முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை நுகேகொடையில் உள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் வைக்கப்படவுள்ளது.
அவரது இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி பிறந்த நந்தா மாலினி, பல தசாப்தங்களாக இலங்கை இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவராவார். தனது இசைப் பயணத்தில் 11 சரசவிய விருதுகள் மற்றும் சிறந்த பாடகிக்கான 8 ஜனாதிபதி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களைப் பெற்றுள்ளார்.










