இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் விசேட சோதனை மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, கடந்த 18 மற்றும் 19ஆம் திகதிகளில் 108 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது, பொருட்கள் பெறப்பட்ட விதத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய 84 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சோதனைகளின்போது சருமத்தை வெள்ளையாக்கும் கிரீம்கள், முகம் மற்றும் உடலுக்கான கிரீம்கள், வாசனைத் திரவியங்கள், முடி பராமரிப்புப் பொருட்கள், விளையாட்டுக் காலணிகள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.1.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆண்டில் கிரீம் மற்றும் திரவப் பொருட்கள் தொடர்பில் சுமார் 785 சோதனைகள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் கட்டளை இலக்கம் 83 இன் படி, உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துபவர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களிடம் உள்ள பொருட்கள் பெறப்பட்ட விதத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
அத்தகைய ஆவணங்கள் மூலம் பொருட்களின் விநியோகஸ்தர், இறக்குமதியாளர் மற்றும் விநியோகச் சங்கிலியை அடையாளம் காண முடியும் என்பதுடன், பொருட்களின் தரம் அல்லது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொறுப்பான தரப்பினரைக் கண்டறிவதற்கும் இது உதவும்.









