தென்னைச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதித் திட்டமொன்றை அல்லது பொருத்தமான நட்டஈட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று (6) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தென்னைச் செய்கையைப் பாதித்துள்ள வெள்ளை ஈ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தென்னம்பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு தற்போது முறையான பயிர் நட்டஈட்டுத் திட்டம் அமுலில் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் காப்புறுதித் திட்டமொன்றை அல்லது பொருத்தமான நட்டஈட்டு நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாகத் தலையிட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘250 செவ்விளநீர் கிராமங்கள்’ வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, சாத்தியமான அனைத்து பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








