அப்ரா அன்சார்
கொழும்பு – காஸாவின் மறுசீரமைப்புக்கான இலக்குகள் தெளிவாக உள்ளதாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.
“முழுமையாக இராணுவமயமற்ற காஸா, பொறுப்புடன் பாலஸ்தீனர்களால் நிர்வகிக்கப்படும் காஸா, அங்கு மக்கள் கண்ணியத்துடனும், வாய்ப்புகளுடனும், நம்பிக்கையுடனும் அமைதியுடனும் வாழக்கூடிய நிலை” என்பதே இதன் இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனான குஷ்னர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இன்று நாம் முன்வைத்தவற்றில் பெரும்பாலானவை ஒரு வருடத்திற்கு முன்பு இருக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது போர் நிறுத்தம் அமுலில் உள்ளது, பணயக்கைதிகள் வீடு திரும்பியுள்ளனர், பாலஸ்தீனிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட அரசாங்கம் தயாராக உள்ளது, பாதுகாப்பு மற்றும் இராணுவமயமற்றதாக்கல் தொடர்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காஸாவை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் 66 திட்டங்கள் ஆரம்பிக்கத் தயாராக உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
“பழைய சுழற்சியை முறியடித்து, வித்தியாசமான ஒன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் எங்களுக்கு சவால் விடுத்தார்.
நாங்கள் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவோம்” என குஷ்னர் தெரிவித்துள்ளார்.
(அல் ஜசீரா)









