திருகோணமலை துறைமுகத்தின் பூம் கோவ் (Boom Cove) பகுதியில் இன்று (28) காலை சிறிய அளவிலான எண்ணெய்க் கசிவு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடலோரக் காவல்படையினர் சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த எண்ணெய்ப் படலம் சுமார் 7 மீற்றர் நீளமும் 2 மீற்றர் அகலமும் கொண்டதாகக் காணப்பட்டதுடன், இன்று காலை 7.30 மணியளவில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக கடலோரக் காவல்படையினர் குழுவொன்று உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவு மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கும் எண்ணெயை உறிஞ்சக்கூடிய பொருட்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கடல் மாசுபாட்டு சம்பவங்களுக்கு விரைவாகப் பதிலளிப்பதுடன், இலங்கையின் கடல் சூழலைப் பாதுகாக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சுத்திகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.







