சவூதி அரேபியாவின் சில பகுதிகளை இலக்கு வைத்து யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கமீஸ் முஷைத், அப்ஹா மற்றும் தாயிஃப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் 13 பேர் சிறிய மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், 7 வீடுகள் மற்றும் 2 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக யெமனில் சட்டபூர்வ அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சவூதி சிவில் பாதுகாப்புப் பிரிவு இன்று (15) காலை அப்ஹா, ஜித்தா, ஜஸான், தாயிஃப், யன்பு, மக்கா மற்றும் அல்-உலா உள்ளிட்ட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஹூதி குழு சவூதி அரேபியாவில் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளைத் தொடர்ந்து திட்டமிட்டு இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









